

நூறு நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மேடவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வைகோ, வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். | படம்: எம்.முத்துகணேஷ் |
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு விபி ஜிராம்ஜி என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், தாம்பரம் அடுத்த மேடவாகத்தில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், மு.வீரபாண்டியன், தொல்.திருமாவளவன், வைகோ, ஜவாஹிருல்லா, காதர் மொகைதீன், தி.வேல்முருகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், மற்றும் எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு மற்றும் திமுக எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று மத்திய அரசுக்கு எதிராக 31 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி எம்எல்ஏ சந்திரன், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.
இது தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் மத்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை காப்போம். விபிஜிராம்ஜியை திரும்ப பெறுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.