

கரூர்: கிருஷ்ணராயபுரம் தொகுதி புலியூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, விசாரணை மேற்கொண்ட பறக்கும் படையை கண்டதும் சம்பந்தப்பட்டவர்கள் குக்கர்களை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். தப்பிடியோடியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக மருத்துவர் எஸ்.திவ்யா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக புலியூர் பகுதியில் இன்று (ஏப்.22) வீடு, வீடாக வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கப்பட்டு வருவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில், குக்கர்களை விநியோகம் செய்தவர்கள் புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இருக்கும் தனியார் தோட்டத்துக்குள் 52 குக்கர்களை போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து, பறக்கும் படையினர் 52 குக்கர்களை பறிமுதல் செய்து மினி வேனில் ஏற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தப்பிடியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், புரவிபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் 100 குக்கர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சோதனையிட சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் அங்க சோதனை நடத்த காத்திருந்தனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ‘இங்கு மட்டும்தான் சோதனையிடுவீர்களா? வேறு சில இடங்களில் வேட்டி, சேலை வழங்குகின்றனர். அங்கு சோதனையிட மாட்டீர்களா?’ என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.