

கும்பகோணம்: கும்பகோணம் லட்சுமிவிலாஸ் அக்ரஹார தெருவில் உள்ள அரசு பிரதம கால்நடை மருத்துவமனை, மருத்துவரே இல்லாமல், ஒரேயொரு மேற்பார்வையாளருடன் மட்டும் செயல்பட்டு வருவதால் கால்நடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், இங்கு மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்படும் கால்நடை மருத்துவர்கள் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த கால்நடை மருத்துவ மனையில் கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 2 வட்டங்களில் இருந்து தினமும் நாய்கள், ஆடுகள், மாடுகள், பூனைகள், குதிரைகள் ஆகியன சிகிச்சை, மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வரப்படுகின்றன.
இங்கு பிரதம மருத்துவர், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர், கால்நடை ஆய்வாளர் என தலா ஒருவர் மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 8 பேர் என மொத்தம் 11 பேர் பணியாற்றி வந்த நிலையில், படிப்படியாக அலுவலர்கள் எண்ணிக்கை குறைந்து தற்போது முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் மட்டுமே பணியில் உள்ளார். மருத்துவரைப் பொருத்த வரை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் இருந்து தேவைக்கேற்ப ஒருவர் முதல் 3 பேர் வரை மாற்றுப் பணியில் இங்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து கால்நடை உரிமையாளர்கள் கூறியது: இந்த கால்நடை மருத்துவமனையில் 11 பேர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் ஒருவர் மட்டும் பணியாற்றி வருகிறார். இங்கு தினமும் 100 கால்நடைகள் சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் இருந்து தேவைக்கேற்ப ஒருவர் முதல் 3 பேர் வரை மருத்துவர்கள் இங்கு மாற்றுப் பணியில் வந்து செல்கின்றனர்.
அவர்கள் கூடுதல் பணிச்சுமை, அலைச்சலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கால்நடை உரிமையாளர்களும், மருத்துவர் இன்று வருவாரா, இல்லையா என தினமும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. பருவநிலை மாறுபாட்டின் போது நோய் பாதிப்புக்கு உள்ளாகும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாகி, கால்நடை மருத்துவருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது.
வேளாண் துறை அமைச்சர் வினோத் இங்கு ஆய்வு செய்தபோது, பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, உடனடியாக போதிய அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறி சென்றார். ஆனால், இதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே, கும்பகோணத்தில் உள்ள பிரதம கால்நடை மருத்துவமனைக்கு, நிரந்தர மருத்துவர் உட்பட போதிய பணியாளர்களை அரசு விரைந்து நியமிக்க வேண்டும் என்றனர்.