சென்னை: உதவித் தொகை உயர்வு கோரி மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 14,000 பேர் கைது
சென்னை: உதவித் தொகை உயர்வு கோரி மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது
Updated on
2 min read

சென்னை: ஆந்திராவில் வழங்குவதைப் போல, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம் அருகே சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற 600-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் சுமார் 700 பேர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். 600-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து, கோட்டூர்புரம் ஏரிக்கரை (மத்திய கைலாஷ் அருகே) சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய வசதி இல்லாததால், அங்கிருந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மாநிலத் தலைவர் தோ.வில்சன் கூறியது: “தமிழகத்தில் 75 சதவீத்துக்கும் கீழ் ஊனமுற்றோருக்கு ரூ.1,500-ம், 75 சதவீதத்துக்கும் மேல் கடும் ஊனமுற்றோருக்கு ரூ.2 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இன்றைய வாழ்வாதாரச் சூழலில் தமிழக அரசு வழங்கும் இந்த உதவித் தொகை எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை.

இந்தத் தொகையை மாற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். அதாவது, புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 வகைகளில் ரூ.2,000 முதல் ரூ.5,500-ம், தெலுங்கானாவில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகையாக ரூ.4,016-ம் வழங்கப்படுகிறது. ஆந்திராவில் 3 வகைகளில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அதாவது, சாதாரண ஊனத்துக்கு குறைந்தபட்சம் ரூ.6,000-ம், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10 ஆயிரமும், மிக கடும் ஊனமுற்றோருக்கு ரூ.15 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது.

திரிபுராவில் ரூ.5,000 வரையும், டெல்லியில் இரண்டு வகையாக ரூ.2,500-ம், ரூ.5,000-ம், ஹரியானாவில் ரூ.3 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மிக குறைவாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 8-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் அதிகபட்ச உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஜிடிபி-இல் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மிகக் குறைவான உதவித் தொகையே வழங்கப்படுகிறது.

எனவே, ஆந்திராவில் வழங்குவதை போல மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: உதவித் தொகை உயர்வு கோரி மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்கு விருது: புதுச்சேரி 12-வது திரைப்பட விழா தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in