

திண்டுக்கல்: இன்று (செப்.15) 42-வது ஆண்டில் கால் பதிக்கும் திண்டுக்கல் மாவட்டம் இதுவரை போதுமான வளர்ச்சியைப் பெறவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மதுரை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த திண்டுக்கல் பிரிக்கப்பட்டு 1985-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்.15-ம் தேதி திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் விவசாயம், ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி மாவட்டம் வளர்ச்சிப் பாதையில் சென்றிருக்க வேண்டும். ஆனால், தன்னிறைவு பெறாமல் உள்ளது.திண்டுக்கல்லில் புவிசார் குறியீடு பெற்ற பூட்டுத்தொழில் வியாபாரப் போட்டியால் நலிவடைந் துள்ளது.
தோல் பதனிடும் தொழிற் சாலைகள் எண்ணிக்கை குறைந்து, தற்போது விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன. நூற்பாலைகள் மிகுந்த வேடசந்தூர் பகுதி மட்டும் கிராமப்புற மக்களுக்கு ஓரளவு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
வேடசந்தூர் பகுதியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொழிற்பேட்டை, திமுக ஆட்சிக்காலத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் கொண்டு வரப்பட்ட தொழிற்பேட்டை அமைக்கும் திட்டங்கள் அரசியல் காரணங்களால் கைவிடப்பட்டன.
குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் புதிதாக தொழிற்சாலைகள் அமைக்கப்படாததால் மாவட்ட மக்கள் வேலைவாய்ப்புக்கு கரூர், திருப்பூர், கோவைக்கு இடம்பெயரும் நிலை தொடர்கிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. மலைப்பகுதியில் பாலித்தீன் பயன்பாடும் தாராளமாக உள்ளது.
எந்த ஆட்சி வந்தாலும் கொடைக்கானலைப் பாராமுகமாகக் கையாள்வது தொடர்கிறது. மூன்றாம் படை வீடான பழநியில் 2-வது ரோப்கார் திட்டம் வேகம் பெறவில்லை. நகரில் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடாக காட்சிதரும் வையாபுரி கண்மாயைச் சீரமைத்து கரைப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை.
திண்டுக்கல் மாநகர எல்லை விரிவாக்கம் கானல்நீராக உள்ளதால் நகரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. பழநி அருகே பச்சையாறு அணைத் திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. மலர் சாகுபடி அதிகம் நடக்கும் நிலக்கோட்டை பகுதியில் சென்ட் தொழிற்சாலை கொண்டு வரப்படவில்லை.
மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குடன் திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே விரைந்து முன்னேற ஏதுவாக இருக்கும். மாவட்டம் தொடங்கப்பட்ட நாளை திண்டுக்கல் நாளாகக் கொண்டாட மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
உருவாகுமா பழநி மாவட்டம்?
தமிழகத்தில் உள்ள பெரிய பரப்பளவுள்ள மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்று. இதனால் நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகாலக் கோரிக்கை.
பழநியைத் தலைமையிடமாகக் கொண்டு கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், மடத்துக்குளம் ஆகியவற்றை இணைத்து பழநியைத் தனி மாவட்டமாக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. மாவட்டத்தைப் பிரித்தால் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.