

தஞ்சாவூர்: விவசாயிகள் ஒவ்வொரு பருவத்துக்கும் சாகுபடி செய்யும்போது, கிராம நிர்வாக அலுவலர்களிடம் 4 முறை அடங்கல் சான்று வாங்க வேண்டியிருப்பதால், அலைக்கழிக்கப்படுவதாகவும், எனவே ஒரு முறை வாங்கப்படும் அடங்கல் சான்றை அந்தப் பருவம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் இந்த 3 பருவங்களிலும் சுமார் 20 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும்.
இதில், ஒவ்வொரு பருவத்திலும், விவசாயிகள் செய்துள்ள சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் சான்றிதழ் பெற வேண்டும்.
இதில், குறிப்பாக குறுவை பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டம், பயிர்க் காப்பீடு, பயிர்க்கடன் பெறுதல், நெல் அறுவடைக்குப் பின் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தல் என 4 முறை அடங்கல் சான்றை கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெற வேண்டி உள்ளது.
120 நாட்கள் சாகுபடி காலமான குறுவை பருவத்தில், 4 முறை அடங்கல் சான்று பெற விவசாயிகள் அலைய வேண்டியுள்ளது. அதேபோல, சம்பா பருவத்திலும் 4 முறை தனித்தனியாக அடங்கல் சான்று பெற நிர்பந்தம் செய்யப்படுகிறது.
எனவே, ஒரு சாகுபடி காலத்துக்கு ஒரு முறை அடங்கல் சான்று பெற்றால் போதும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பாசனதாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் புலவன் காடு மாரியப்பன் கூறியது: குறுவை, சம்பா, தாளடி என ஒவ்வொரு சாகுபடிக்கும் 4 முறை என 3 பருவங்களிலும் குறைந்தபட்சம் 12 முறையாவது கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து அடங்கல் சான்று பெற வேண்டியிருக்கிறது.
இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல் ஏற்படுவதுடன், பண விரயம், மன உளைச்சல் ஏற்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு அடங்கல் சான்று பெற்றால், அதை அந்த பருவத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.