

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஆகாஷ்டெல்சனின் உறவினர்கள். (உள்படம்) உயிரிழந்த ஆகாஷ்டெல்சன்.
மானாமதுரை: மானாமதுரையில் 2 தொழிலாளர்களை வெட்டிய வழக்கில் கைதாகி, கால் முறிவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.
போலீஸார் தாக்கியதில் இறந்ததாகக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கோழிக்கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 5-ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றபோது, அவர்கள் மீது அதே பகுதியைச் சேர்ந் பொறியியல் பட்டதாரி ஆகாஷ்டெல்சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், கிருஷ்ணராஜபுரம் மயானம் அருகே ஜெயக்குமார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோர் இருவரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மேலப்பசலையில் இருந்த ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெல்சன் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.
கைதான இருவரையும் மார்ச் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆகாஷ் டெல்சன் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை போலீஸார் விசாரிக்கின்றனர். இதனிடையே, போலீஸார் தாக்கியதால்தான் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்ததாகக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே மதுரை- ராமேசுவரம் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்என வலியுறுத்தினர். அவர்களிடம் நகாட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்து முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியல் தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.
இதையடுத்து, மதுரை, ராமேசுவரம் வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் அனைத்தையும் போலீஸார் சிவகங்கை, கமுதி உள்ளிட்ட வேறு வழித்தடங்களில் மாற்றிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஆகாஷ்டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன், தாயார் ஆனந்தி ஆகியோர் கூறியதாவது: எங்களது மகனை ஒரு வழக்கில் தேடுவதாகக் கூறி போலீஸார் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போதே உங்களது மகன் கையில் கிடைத்தால் கொன்றுவிடுவோம் என்றனர்.
சிறிது நேரத்தில் எங்களது மகனை கைது செய்துவிட்டதாகக் கூறி, எங்களை விடுவித்தனர். தொடர்ந்து எங்கள் மகனுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதாகக் கூறினர். அவனை சென்று பார்த்தபோது போலீஸார் தன்னை அடித்ததாகக் கூறினான்.
இந்நிலையில் திடீரென எங்களது மகன் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று, எங்களது மகனின் காலை உடைத்துவிட்டனர். அதனால் தான் உயிரிழந்துவிட்டான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனிடையே இந்த மறியல் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவமனையிலும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.