மாணிக்கம் தாகூரை கண்டித்ததா காங்கிரஸ் தலைமை? - சலசலப்பில் சத்தியமூர்த்தி பவன்

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

Updated on
2 min read

தொடர்ந்து திமுக-வுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துவந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் தலைமை கண்டித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணிக்கம் தாகூரும் காங்கிரஸ், நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர், திமுக-வை சங்கடப்படுத்தும் விதமாக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. இதன் உச்சமாக, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "நீங்கள் செய்த தவறுகளுக்காகப் நாங்கள் பழியைச் சுமந்திருக்கிறோம்" என மறைமுகமாக திமுக-வை சாடியது கூட்டணிக்குள் மேலும் புயலைக் கிளப்பியது.

இதையடுத்து, “கூட்டணிக்கு பாதகம் உண்டாக்கும் விதமாக யார் பேசினாலும் அது தவறுதான்” என கண்டித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கட்சி மேலிட உத்தரவை மீறிப் பேசி வரும் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையைத் தொடர்பு கொண்ட திமுக மேலிடம், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவோம் எனத் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “கூட்டணி ஆட்சி குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களது சொந்தக் கருத்தே தவிர, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கூட்டணி மற்றும் அதன் முடிவுகள் குறித்து அகில இந்தியத் தலைமை மட்டுமே இறுதி முடிவெடுக்கும்” எனத் தெளிவுபடுத்தினார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அறிவாலய சீனியர்கள், “திமுக-வின் புகாரை அடுத்து காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாகூரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. அதற்கு அவர், ‘திமுக நம்மைச் சுத்தமாக மதிக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட விருதுநகர் தொகுதியில் சரியாக வேலை செய்யவில்லை. எனவேதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டேன், அப்போதுதான் கட்சி வளரும்’ எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேலிடம், ‘எதுவாக இருந்தாலும் அகில இந்திய தலைமையின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்து தாகூரைக் கண்டித்திருக்கிறது” என்றனர்.

காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாகூரை அழைத்து கண்டித்ததாகச் சொல்லப்படும் தகவல் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில், தனது எக்ஸ் தள பக்கத்தில் மாணிக்கம் தாகூர், ‘தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பாரதியாரின் வரிகளைப் பதிவிட்டிருக்கிறார். இதுவும் திமுக-வைச் சீண்டும் வகையில் இருப்பதாகச் சொல்லி திமுக வட்டாரம் இன்னும் சூடாகி வருகிறது.

<div class="paragraphs"><p>மாணிக்கம் தாகூர்</p></div>
முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை: ஏமாற்றத்துடன் திரும்பிய கே.சி.வேணுகோபால்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in