

மாதிரி படம்
சிவகங்கை: தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் விநியோகித்த டயாலிசிஸ் திரவப் பை திடீரென நிறுத்தப்பட்டதால் சிஏபிடி நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இயந்திரங்களில் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர்.
மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாதோர் இயந்திரமின்றி வீடு, அலுவலகங்களில் இருந்தபடியே ‘தொடர்ச்சியான நடமாடும் பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ (சிஏபிடி) என்ற முறையில் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர்.
இந்த முறையில் சிகிச்சை பெற டயாலிசிஸ் திரவம் தேவைப்படுகிறது. இந்த திரவப் பையை வயிற்றில் குழாய் மூலம் பொருத்தினால் போதும், ஈர்ப்பு விசை மூலம் திரவம் உடலுக்குள் சென்று டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை பெறுவோர் தங்களது அன்றாடப் பணிகளை செய்ய முடியும்.
இந்த முறையில் தமிழகம் முழுவதும் சிறுவர்கள் முதல் முதியோர் வரை பல ஆயிரம் பேர் டயாலிசிஸ் செய்கின்றனர். இதில், நாளொன்றுக்கு குறைந்தது 3 முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறையும் டயாலிசிஸ் திரவப் பையை மாற்ற வேண்டும். இந்தத் திரவப் பையை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கே வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து திரவப் பை விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், சிஏபிடி நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், ஜெயகொண்டானைச் சேர்ந்த பூவராகவன் கூறியதாவது: 83 வயதான எனது தாயார் சிஏபிடி முறையில் டயாலிசிஸ் செய்து கொள்கிறார். அவருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தலா 6 டயாலிசிஸ் திரவப் பைகள் உள்ள 15 பெட்டிகளை மாதந்தோறும் வழங்கினர். கடந்த 3 மாதங்களாக நிறுத்திவிட்டனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனைகளில் கேட்டால் தமிழகம் முழுவதும் நிறுத்தி விட்டதாகக் கூறுகின்றனர். சிஏபிடி முறையை மேற்கொண்டோருக்கு இயந்திரம் மூலம் டயாலிசிஸ் செய்ய முடியாது. ஒரு திரவப் பை ரூ.305 என்பதால், தினமும் ரூ.915 தேவைப்படுகிறது. இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். மீண்டும் டயாலிசிஸ் திரவப் பையை விநியோகிக்க தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.