

உயர் நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தில் உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லிகளாக பணியில் இல்லை என்ற டிஜிபியின் அறிக்கை நம்பும்படியாக இல்லை என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலர் மற்றும் உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை அறவே ஒழிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆர்டர்லி முறை இன்னும் அமலில் உள்ளதாகவும், சுமார் 5 ஆயிரம் பேர் ஆர்டர்லிகளாக பணியில் உள்ளதாகவும், அதில் 800-க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியின் அடிப்படையில் இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. அப்போது மாநில அரசு தலைமைகுற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி ஒருவர் கூட ஆர்டலிகளாக பணியமர்த்தப்படவில்லை என்றார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் ஒருவர்கூட ஆர்டர்லிகளாக பணியில் இல்லை என்ற டிஜிபியின்அறிக்கை நம்பும்படியாக இல்லை. ஆர்டர்லி முறை இன்னும் அமலில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்ற நீதிபதிகள், மேலும் கூறியதாவது: ஆங்கிலேயர் காலத்து அடிமை சாசனம் இன்னும் தொடரக்கூடாது என்பதற்காகத்தான் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கில் தமிழக அரசு கடந்த 1979 செப்.15-ம் தேதி ஆர்டர்லி முறையை ஒழித்து அரசாணை பிறப்பித்தது அந்த அரசாணையை அரசும், போலீஸ் அதிகாரிகளும் மதிப்பதில்லை.
ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளிலும், பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளிலும் ஆர்டர்லிகளாக பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணியமான காவல்துறையில் சேர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக பணியாற்றும் பல போலீஸார், அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக தோட்டம், வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. அதனால்தான் இதனை ஒழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் 5 ஆயிரம் பேர் ஆர்டர்லிகளாக பணியில் உள்ளனர் என செய்திகள் வெளிவரும் நிலையில், ஒருவர்கூட இல்லை என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். போலீஸ்காரர்கள் தேசநலனுக்காகத்தான் பணியாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மைநிலையை அறிய தமிழக அரசின் தலைமைச்செயலர், உள்துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள் பதிலளிக்க வேண்டும். மாநிலஅரசு தலைமை மற்றும் குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு உதவுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜன.7-க்கு தள்ளி வைத்தனர்.