

கடலூர்: வடலூர் சத்தியஞான சபை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்தியஞான சபை நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 30 ஏக்கர் பரப்பிலான சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும், பெருவெளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் கடந்த அக். 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள் கிடைக்கவில்லை எனவும், அதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு விவரங்களை வழங்க மாவட்ட ஆட்சியர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 2024-ம் ஆண்டே ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் விவரங்களை வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பியதுடன், நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை அறநிலையத்துறைக்கு வழங்க வேண்டும் என ஆட்சியர் தரப்புக்கும், விவரங்களைப் பெற்றதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சத்தியஞான சபைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைகளை நிர்ணயித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காணும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
காவல்துறை பாதுகாப்புடன் நடைபெறும் களஆய்வில், நிலங்களின் தற்போதைய எல்லைகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களின் பரப்பளவு மற்றும் அவற்றின் தன்மை ஆகியவை கணக்கிடப்படுகின்றன. மேலும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் உள்ள நில உரிமை ஆவணங்கள், வருவாய்த்துறை பதிவேடுகள் ஆகியவற்றை ஒப்பிட்டு சரிபார்த்து, நிலங்களின் உரிமை மற்றும் வகைபாட்டை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பு புகார்களுக்கு உள்ளானவர்களிடம் உரிய ஆவணங்களைப் பெற்று, அவர்களுக்கு விசாரணை வாய்ப்பளிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய ஆய்வின் மூலம் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களின் அளவு, ஏற்கெனவே அகற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆக்கிரமிப்புகளின் நிலை மற்றும் மீதமுள்ள நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.