

சென்னை: “அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.
‘நான்கு இருக்கைகள் கொண்ட சோஃபா இப்போது ஐந்து இருக்கைகள் கொண்ட சோஃபாவாக அப்கிரேடு செய்யப்பட்டது’ என சோஃபாக்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து எக்ஸ் தள பக்கத்தில், தவெகவை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “சன்ஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவரான தங்களுக்கு, அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல, முதல்வர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது.
தமிழகத்தில் 2026 மே 4-ம் தேதி வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.