சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான போரூர் - பூந்தமல்லி வரையிலான பாதையில்ரயில் மற்றும் வழித்தடத்துக்கான பாதுகாப்பு சான்றிதழுக்காக, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் (ஆர்.டி.எஸ்.ஒ.) சோதனை நிறைவடைந்து, இதுவரையில் ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதனால், இப்பாதையில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும்.
இத்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இத்தடத்தில் ஒரு பகுதியான, பூந்தமல்லி - போரூர் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் வரை 10 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஏனெனில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இப்பாதையில் இந்த மாதத்தில் தொடங்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, ரயில் தண்டவாளம் அமைத்து, ஓட்டுநர் இல்லாத ரயில்களின் சோதனை ஓட்டமும் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், இத்தடத்தில் மெட்ரோ ரயில் மற்றும் வழித்தடத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனையை இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஒ.) ஆக.16-ம் தேதிமுதல் ஒரு வாரத்துக்கு மேல் நடத்தியது.
அப்போது, மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்பட்டது.
இதன்பிறகு, பாதுகாப்பு சான்றிதழ் விரைவில் கிடைத்து விடும் என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கவில்லை.
இதன் காரணமாக, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பாதையில் கடந்த ஆகஸ்டில் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பினர் சோதனை நடத்தினர்.
இக்குழுவினர், ரயில்வே வாரியத்துக்கு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு ஒப்புதல் அளித்து, பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தர வேண்டும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகே, பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து, இப்பாதையில் சோதனை ஓட்டம் உட்பட பல்வேறு சோதனைகளை நடத்தி ஆய்வு செய்வார்.
ஏதாவது திருத்தம் இருந்தால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவிப்பார். இல்லைஎனில், இப்பாதையில் ரயில் இயக்கலாம் என்று அறிக்கை சமர்ப்பிப்பார். இச்செயல்முறைகள் முடிந்து, விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது, இப்பாதையில் 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. ஓரிரு இடங்களில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இப்பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இயக்க தயாராக இருக்கிறோம். இதற்காக நாங்கள் ரயில்வே வாரியத்துடனும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துடனும் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.