

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கைக்கு மத்திய அரசின் அனுமதியை பெற தாமதம் செய்தது குறித்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர் ஜன.6-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்பபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி அறப்போர் இயக்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் வேலுமணியுடன் சேர்த்து ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய கார்த்திக்கேயன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் தொடருவதற்கான மத்திய அரசின் அனுமதியை பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என நீதிபதி ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ”இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மீது கடந்த 29 மாதங்களாக பொதுத்துறைச் செயலர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டது துரதிருஷ்டவசமானது. தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறும் அரசியல் கட்சிகள், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான குற்ற விசாரணைக்கு அனுமதி பெறாமல், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து என்ன பயன்” என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடங்க முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்த நீதிபதி, இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கும் வகையில் மத்திய அரசின் அனுமதியை பெற, கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பது குறித்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர் ஜன.6-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல இதுதொடர்பான நினைவூட்டல் நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜன.6-க்கு தள்ளி வைத்துள்ளார்.