ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு: திருச்சியில் மார்ச் 11-ல் பிரதமர் மோடி பிரச்சார பொதுக் கூட்டம்

ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு: திருச்சியில் மார்ச் 11-ல் பிரதமர் மோடி பிரச்சார பொதுக் கூட்டம்
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் மார்ச் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: வரும் மார்ச் 11-ம் தேதி டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வருகை தருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் சூரியூர் பகுதிக்கு செல்கிறார். புதிய மத்திய சிறைச்சாலை கட்டப்ட உள்ள இடத்துக்கு அருகில் அமைக்கப்படும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.

பின்னர் அதேவழியில் கார் மூலம் விமான நிலையம் திரும்புகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, திருவளர்ச்சிப்பட்டி, மாத்தூர் சுற்றுச்சாலை, சூரியூர் பொதுக்கூட்ட மேடை வரை பல்லாயிரக்கணக்கானோர் பிரதமரை வரவேற்கும் ‘ரோடு ஷோ’ நடைபெற உள்ளது.

திருச்சியில் நடைபெறும் கூட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாஜக தொண்டர்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

இதனால் மறுநாள்(மார்ச் 12) பிரதமர் மோடி பங்கேற்க விருப்பதாக கூறப்பட்ட தஞ்சாவூர் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு: திருச்சியில் மார்ச் 11-ல் பிரதமர் மோடி பிரச்சார பொதுக் கூட்டம்
மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in