

சென்னை: மருது சகோதரர்களின் நினைவு நாளான இன்று, தமிழக முதல்வர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இது குறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில்; தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், ‘ஜம்புத் தீவு பிரகடனத்தை’ முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்.
அன்புமணி: உலகையே நடுங்க வைத்த ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டியடித்த வீரத்தின் விளைநிலம் மருது சகோதரர்கள், சதியால் வீழ்த்தப்பட்டு தூக்கிலிடப்பட்டதன் 225-ம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நான் போற்றி வணங்குகிறேன்.
தாய்நாட்டைக் காப்பதற்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்த மருது பாண்டியர்களின் வரலாறு இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
வீரம், துணிச்சல், தியாகம் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மருது சகோதரர்கள் தேசப்பற்றுக்கு முன்னுதாரணம் ஆவர்.அவர்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்; மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம்.
டிடிவி தினகரன்: ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, விடுதலை வேட்கைக்கு வித்திட்ட வீர வேங்கைகளும், தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி தியாகம் செய்த மாமன்னர்களுமான மருதுபாண்டியர்களின் நினைவுதினம் இன்று.
ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்தோடும், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தளராத போர்க்குணத்தோடும், மக்களின் உரிமைக்காக உயிரையும் அர்ப்பணித்த தென்னகத்தின் விடுதலைப் போராட்ட முன்னோடிகளான மருதுபாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
நயினார் நாகேந்திரன்: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரத்துடன் போராடி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரையும் ஈந்த மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.
சிவகங்கை மண்ணின் வீரச் சின்னங்களாகத் திகழ்ந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரர்கள், அந்நிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்தவர்கள்.
அவர்களின் அஞ்சா நெஞ்சமும், தாய்மண் மீதான பற்றும், தன்னலமற்ற தியாகமும் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மருது சகோதரர்களின் வீர வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம்.