

டாஸ்மாக் | கோப்புப் படம்
சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘மொத்தம் 28 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் ஒரு மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘‘மதுபாட்டில்களில் ‘க்யூஆர் கோடு’ பொருத்தும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த பணி முடிந்த பிறகு, காலிமதுபாட்டில்களை திரும்பப் பெறுவது டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது.
தற்போது 29 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்த கடைசி வாய்ப்பாக மே இறுதி வரை அவகாசம் வழங்கவேண்டும்’’ என்று கோரப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: தினமும் 2 கோடி மதுபாட்டில்கள் விற்கும் நிலையில், காலிபாட்டிலை திரும்பப் பெறுவதில் என்ன சிரமம் உள்ளது. பணியாளர்கள் பிரச்சினை என்றால் அதற்கு அரசு தீர்வு காண வேண்டும். சுற்றுச்சூழல் நலன் கருதி ஒரு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஏற்கெனவே அவகாசம் வழங்கியும் இன்னும் நீட்டித்துக்கொண்டே செல்கிறீர்களே.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் மே 31-க்குள்முழுமையாக அமல்படுத்தாவிட்டால், சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீடு நிதியாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் இருந்து ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வசூலிக்க நேரிடும். மேலும், காலி பாட்டில்கள் உடையும் அளவுக்கு தாறுமாறாக சேகரிக்காமல் முறையாக சேகரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.