கனமழை எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை!
Updated on
1 min read

சென்னை: அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை (நாளை) அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (நாளை) விடுமுறை விடப்படுகிறது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் வருடாந்திர காலஅட்டவணையின்படி நவம்பர் 29 சனிக்கிழமை விடுமுறை நாள் ஆகும். அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை நாள்தான். அதேநேரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் வகுப்பு இருக்கலாம் என்பதை கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

புயல் எச்சரிக்கை:

இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டித்வா' புயல் நாளை மறுநாள் (டிச.30) அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை (டிச.29) மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை (‘ரெட் அலர்ட்’) பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை!
நெருங்கும் ‘டித்வா’ புயல்: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in