சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு, வடமேற்காக நகர்ந்து இன்று (நவ.16) புயலாக வலுவடையவுள்ளது. இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ‘அக்வான்’ என்று பெயரிடப்பட உள்ளது. நாளை இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக நிலவக்கூடும். இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் தொடங்கி மாலத்தீவு வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, வட கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
நவ.17, 18, 19-ம் தேதிகளில் வட தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, 17-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கனமழையும், 18-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும். 19-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் 21-ம் தேதி வரையும், அந்தமான், நிகோபார் தீவுப் பகுதிகளில் 17-ம் தேதி வரையும், தென் மேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதியில் 18-ம் தேதி வரையும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.