“தமிழகம் - காசி இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார தொடர்பு” - ஆளுநர் அர்லேகர் பெருமிதம்

காசி தமிழ் சங்கமம் 5.0 அறிமுக விழா
“தமிழகம் - காசி இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார தொடர்பு” - ஆளுநர் அர்லேகர் பெருமிதம்
Updated on: 
2 min read

சென்னை: தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார தொடர்புகள் இருந்து வருவதாக 'காசி தமிழ் சங்கமம் 5.0' அறிமுக விழாவில் மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கும் வட இந்தியாவில் உள்ள காசிக்கும் இடையிலான பண்பாட்டு தொடர்புகளை பலப்படுத்தும் வகையில் சென்னை ஐஐடி சார்பில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, காசி தமிழ் சங்கமம் 5.0 என்ற பெயரில் இந்த ஆண்டு 5-வது ஆண்டாக நவம்பர் 28 முதல் முதல் டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பேசியது: “தேச ஒருமைப்பாடு குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிரதமர் வெறுமனே பேசுவதுடன் நின்றுவிடாமல் தேச ஒருமைப்பாட்டை மேம்படுத்தக் கூடிய செயல்களையும் செய்து வருகிறார். அந்த வகையில்தான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய மக்கள் அனைவரும் கலாச்சாரம், பாரம்ரியம், வரலாறு, புவியியல் ரீதியாக ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள். இந்த தொடர்பை மீண்டும் மீண்டும் நினைவுகூர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலாச்சார ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் தொன்று தொட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருந்து வருகிறது. அந்த தொடர்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்தியாவை பல கலாச்சாரங்கள் நிறைந்த ஒரு தேசம் என்று கூறுகிறார்கள். பாரம்பரியங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் கலாச்சாரம் ஒன்றுதான் அது பாரதம் என்ற கலாச்சாரம். தமிழகம் காசியுடன் மட்டுமல்ல சவுராஷ்டிரம், மகாராஷ்டிரம், ஒடிஷாவுனும் நீண்ட காலமாக கலாச்சார தொடர்புகளை வைத்துள்ளது. இந்த கலாச்சார தொடர்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம்” என்று ஆளுநர் அர்லேகர் கூறினார்.

ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, "ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும் பிரதமர் மோடியின் தொலை நோக்கு திட்டத்தின் கீழ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் "திருக்குறள் பயில்வோம்" என்பதாகும். நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோர் எழுத்தாளர்கள், ஆன்மிக பிரமுகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் 500 பேர் காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு (www.kashitamil.iitm.ac.in) அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு கடைசி நால் நவம்பர் 13-ம் தேதி ஆகும். திருக்குறள் மற்றும் காசி தொடர்பான தேர்வு, தொலைபேசி நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் 1,500 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் காசி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்கள், பண்பாட்டு மையங்கள் மற்றும் ஆன்மிக தலங்களை பார்வையிடுவார்கள்.

கல்வி சார்ந்த கலந்துரையாடல், கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். மேலும், நாடு முழுவதும் 1000 கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரை உருவாக்க அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பெல்லோஷிப் வழங்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஐஆர்சிடிசி குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு, மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“தமிழகம் - காசி இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார தொடர்பு” - ஆளுநர் அர்லேகர் பெருமிதம்
சுற்றுலாவுக்கு நிகராக சட்டம் - ஒழுங்கிலும் புதுச்சேரி அரசு அக்கறை காட்ட திமுக எம்எல்ஏ கோரிக்கை

X