கோப்புப் படம்
இந்தியப் பொருட்களுக்கு 500% வரி: அமெரிக்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஜன.22-ல் போராட்டம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் சென்னையில் கடந்த 9-ம் தேதிநடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, பி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3 தீர்மானங்கள்: குடும்ப அட்டைதாரர்களிடம் கைரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அவர்களிடம் கையெழுத்து பெற்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அரசு திட்டமிட வேண்டும். இந்தியப் பொருட்களுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதைக் கண்டித்தும், அமெரிக்க அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 நகரங்களில் ஜன.22-ம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
வெனிசுலா நாட்டின் தலைவர் மதுரோ கைதுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 5, 6-ம் தேதிகளில் போராட்டம் நடத்தின. அப்போது, போராட்டம் தொடங்கும் முன்பாகவே கட்சியினரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை கைது செய்து, பொய் வழக்கு போட்டுள்ளனர். இதில் முதல்வர் தலையிட்டு, பொய் வழக்குகளை ரத்து செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
