

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.சுகந்தி, இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். உடன் கட்சி நிர்வாகிகள்.
மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதியில் இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கவில்லை என்றும் குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்படும் அரசு நிதி எங்கே செல்கிறது என்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பா.சுகந்தி கேள்வி எழுப்பினார்.
மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட கத்திரிசேரி, விழுதமங்கலம், முன்னித்திப்பம், வளர்பிறை, முள்ளி, தேவாதூர், அருங்குணம், அகத்திப்பட்டு, புலியரண்கோட்டை, தென்னம்பட்டு, கீரல்வாடி, மேலகண்டை, அத்திவாக்கம், கீழ்கண்டை, தர்மாபுரம், ஜல்லிமேடு, அவுரிமேடு, சித்திரவாடி, முதுகரை, வசந்தவாடி, புலிக்கொரடு, ஆமயம்பட்டு, தாதங்குப்பம், பாக்கம், வயலூர், ஒழுப்பாக்கம், மேல்சிலாவட்டம், கீழ்சிலாவட்டம், ஐயனார் கோயில், சிறுகளத்தூர் பகுதிகளில் அவர் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மற்றும் இருளர் பழங்குடியின மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் அடிப்படை வசதிகள் இல்லை. குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பகுதி மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை இருப்பதும் அரசின்கவனத்துக்கு வரவில்லையா, இம்மக்களுக்காக அரசு ஒதுக்கும் நிதி முழுமையாக அவர்களைச் சென்றடையாதது ஏன்? இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மேலும், தான் வெற்றி பெற்றால் இருளர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், மருத்துவம் மற்றும் கல்விவசதிகள் கிடைக்கவும், மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயிலவும்உரிய நடவடிக்கைகளுக்காக போராடுவேன் என உறுதியளித்து வாக்கு சேகரித்தார். அவருடன் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடன் சென்றனர்.