

சென்னை: ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆளும் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிகழ்வு தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.
காவல் துறையில் புகார் அளிக்கக் கூடாது என எம்எல்ஏ வி.ஜி.சரவணன் மிரட்டியதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.