

மு.வீரபாண்டியன்
கோவை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என, கோவையில் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: வரும் காலங்களில் இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டின் நலனுக்காக, உரிமைக்காக ஒன்றிணைந்து செயல்படுவதாக முடிவு எடுத்துள்ளோம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூடி தேர்தல் வியூகம் அமைப்போம். தற்போதைய சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு அளித்து, 108 இடங்கள் வென்ற தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் சட்டப்பேரவையில், மக்களவையில் இல்லாமல் இருந்தாலும் தெருக்களில் எங்கள் குரல் ஒலிக்கும். ஆட்சியின் தவறுகளை மூடி மறைக்கமாட்டோம். நல்லது செய்தால் வரவேற்போம். தவெக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உரிய கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கால அவகாசம் கூடாது. இளைஞர்கள், மாணவர்கள், பெண் குழந்தைகள் மீதான தாக்குதலை, ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் கடந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்ததை வரவேற்கிறோம். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு இருந்தால், அதை நாங்கள் எதிர்க்கமாட்டோம். இந்த உறவால் மத்திய அரசு திணிக்கும் வலையில் விழுந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.