

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. இதில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளை முடித்திருக்கிறது. ஆனாலும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள், கூட்டணிக்குள் தேமுதிக வருகை என தற்போதைய சூழலால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2021-ல் ஏற்கெனவே வழங்கப்பட்ட 6 தொகுதிகளில் ஒன்றை குறைத்து 5 ஆக வாங்கிக்கொள்ளுமாறு திமுக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏற்கெனவே வழங்கப்பட்ட 6 தொகுதிகளையாவது வழங்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கொண்டிருக்கிறது.
இதையொட்டி நடைபெறும் ஒவ்வொரு கட்ட பேச்சுவார்த்தைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி, முடிவுகளை பரிசீலித்து வருகிறது.
அந்தவகையில் திமுக தற்போது நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அழைத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இது இறுதிகட்ட பேச்சுவார்த்தையாக இருக்கலாம். இதையொட்டி கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம், தி.நகர் பாலன் இல்லத்தில் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்காக உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல், கட்சி நிதி, மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி உள்ளிட்டவை குறித்து கிளை வாரியாக விவாதிக்கப்பட்டது. முக்கியமாக தொகுதி பங்கீடு குறித்து இதுவரை திமுகவுடனான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (மார்ச் 16) கூடுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் திமுகவுடனான 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்லும் எனவும், தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளை முடிவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.