‘ஜனநாயகன்’ படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் - தணிக்கை குழுவுக்கு சிபிஐ வலியுறுத்தல்

‘ஜனநாயகன்’ படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் - தணிக்கை குழுவுக்கு சிபிஐ வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என திரைப்படத் தணிக்கைக் குழுவை, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கேவிஎன் நிறுவனம், நிகழ்கால அரசியல் போக்குகளை எதிரொலிக்கும் “ஜனநாயகன்” திரைப்படத்தை தயாரித்துள்ளது.

ஜன. 9 ஆம் தேதி வெளியிட தேதி நிர்ணயிக்கப்பட்ட, இந்தத் திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 15 தேதி தணிக்கை வாரியத்தின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்தின் மூலம் 16 பேர் படம் பார்த்து, பரிசீலித்ததன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டு, படத்தை 16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம் என சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தணிக்கைக் குழுவின் முடிவை எதிர்த்து, படத்தயாரிப்பாளர்கள் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்குவதில் அரசியல் தலையீடுகள் வெளிப்பட்டு வருவதை மக்கள் எளிதில் உணர முடியும். கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன் வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, திரைப்படத் தணிக்கைக் குழுவை வலிறுத்திக் கேட்டுக் கொள்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சென்சார் போர்டு என்பது திரைத்துறைக்கு உதவவும், மேம்படுத்தவும் செயல்பட வேண்டுமே தவிர திரைத்துறையை அழிப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் செயல்படக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சென்சார் போர்டு என்பது திரைத்துறைக்கு உதவவும், மேம்படுத்தவும் செயல்பட வேண்டுமே தவிர திரைத்துறையை அழிப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் செயல்படக்கூடாது.

“ஜனநாயகன்” திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், சென்சார் போர்டு மேல்முறையீட்டுக்குப் போவது என்பது இடையூறு செய்யவும், நஷ்டம் ஏற்படுத்துவதற்கும் உரிய உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதப்படும். திரைத் துறைக்கு எதிரான சென்சார் போர்டின் இது போன்ற செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜனநாயகன்’ படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் - தணிக்கை குழுவுக்கு சிபிஐ வலியுறுத்தல்
‘‘திமுக அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வேண்டும்’’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in