

சென்னை: பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகக் கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை விநியோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், புத்தக விநியோகத்துக்காக அரசு தரப்பில் வழங்கப்பட்ட ரூ.1.74 கோடி தொடர்பாக அந்நிறுவனத்தின் வங்கி கணக்கையும் முடக்கினர்.
இந்நிலையில், மோகன் கைது செய்யப்பட்டவுடன் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை. விசாரணையில் கிடைத்துள்ள பல்வேறு புதிய ஆதாரங்கள் குறித்து விசாரிக்க அவரை 3 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் கடந்த 26-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 28-ம் தேதி தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மோகனை நவ. 28 முதல் நவ. 30-ம் தேதி மாலை 4 மணி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். விசாரணையின்போது மோகனுடன் அவரது வழக்கறிஞர் ஆல்வின் ஸ்டெல்சன் உடனிருக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையே, நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும் சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்படவில்லை என மோகன் தரப்பில் முறையிடப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகளை வழங்குமாறும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.