

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி விபத்துக்குள்ளான கார்.
சேலம் / ஈரோடு: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் கார் மூழ்கியதில் வயதான தம்பதி உயிரிழந்தனர். சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த தம்பதி வெங்கடாசலம் (73), ராதா (63).
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற வெங்கடாசலத்தின் மகன் அமெரிக்காவிலும், மகள் கோவையிலும் வசிக்கின்றனர். சின்னத்திருப்பதியில் தம்பதி தனியாக வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி, ஏனாதி கிராமம் வழியாகச் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது.
ஓமலூர் சின்னத்திருப்பதியில் நடைபெறும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வெங்கடாசலம், ராதா நேற்று அதிகாலை 5 மணிக்கு காரில் சென்றுள்ளனர்.
செம்மாண்டப்பட்டி ஏனாதி ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், வெங்கடாசலம் காரில் சுரங்கப் பாதையை கடக்க முயன்றார்.
அப்போது, மழைநீரில் கார் மூழ்கியது. கார் லாக் ஆனதால், தம்பதி வெளியேற முடியவில்லை. குளம்போல தேங்கியிருந்த மழை நீரில் கார் முழுமையாக மூழ்கியதால், தம்பதியர் காருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று காலை அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், ரயில்வே சுரங்கப் பாதையில் கார் மூழ்கியிருந்ததைப் பார்த்து ஓமலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடம் வந்து ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கியிருந்த காரை வெளியே எடுத்தனர்.
அப்போது, காருக்குள் வெங்கடாசலம், ராதா ஆகியோர் உயிரிழந்து இருந்தனர். இருவரின் உடலையும் மீட்டு, பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சுரங்க பாதைகளில் மழைக் காலங்களில் மழை நீர்தேங்கி வருவது வழக்கமாக உள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அதுவரை மோட்டார் பம்ப் மூலம் சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை அதிகாரிகள் வெளியேற்றுவதன் மூலமும் இதுபோன்ற விபத்து சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் கார்த்திக் (6). அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை கார்த்திக் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் அவன் வீடு திரும்பவில்லை.
வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின்பேரில் ஆசனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் ஓடையில் தேடும்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை அதே பகுதியில் ஓடையில் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.