

மதுரை: குழந்தைகளின் நலனுக்காக முறிந்துபோன ஒரு திருமண உறவைத் தொடருமாறு தம்பதியினரை கட்டாயப்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தேனி குடும்ப நல நீதிமன்றத்தில் இளம் பெண் ஒருவர் 2020-ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அவரது மனுவில் தனக்கு 2005-ல் திருமணம் நடந்ததாகவும், 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மனைவிக்கு விவாகரத்து வழங்கியதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கணவர் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: திருமண உறவின் மிக முக்கிய அடித்தளங்களில் ஒன்றான ‘பரஸ்பர நம்பிக்கை’ இருவரிடமும் நீடிக்கிறதா என்பதை ஆய்வு செய்வது நியாயமானது. இந்த அணுகுமுறை, வழக்கின் உண்மைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
அடிப்படை அம்சங்களே பெருமளவில் சிதைந்து போயிருக்கும் நிலையில் திருமண உறவை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்பதை மதிப்பிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.
மனுதாரர் குழந்தைகளின் நலனை முதன்மையாகக் கருதி திருமண உறவைத் தக்க வைத்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். திருமண விவகாரங்களில் குழந்தைகளின் நலன் ஒரு முக்கியமான காரணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், குழந்தைகளின் நலனுக்காக முறிந்து போன ஒரு திருமண உறவைத் தொடருமாறு தம்பதியினரை கட்டாயப்படுத்த முடியாது.
குழந்தை காற்றை மட்டுமல்ல, தன் பெற்றோருக்கிடையே நிலவும் சூழலையும் சுவாசிக்கிறது. பெற்றோருக்கிடையிலான உறவில் இணக்கம் குறைந்து, அன்புக்கு பதிலாக கசப்பும், தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்போது வீடு குழந்தைக்கு ஒரு ‘இல்லமாக’ இருப்பதில்லை. குழந்தையிடம் பொம்மைகளும், வசதிகளும் இருக்கலாம். ஆனால், ஒரே கூரையின் கீழ் பெற்றோர் வெளியாட்கள் போல் வாழ்வதைக் கண்டு வளரும் குழந்தைக்கு மகிழ்ச்சியான குழந்தைப் பருவமோ தான் குடும்பத்தில் ஒரு அங்கம் என்ற உணர்வோ கிடைக்காது.
தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு வளர்வதற்குப் பதிலாக, வாக்குவாதங்களைக் கேட்டு வளரும் குழந்தை குழப்பமும், பாதுகாப்பற்ற உணர்வும் கொண்டு, தான் நேசிக்கும் இரு மனிதர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும். தந்தைக்கும், தாய்க்கும் இடையே இத்தகைய இணக்கமான பிணைப்பு இல்லையெனில், குழந்தையின் மனதில் அமைதி இருக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.