

சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸுக்கு புதிய பொறுப்புத் தலைவர் நியமிக்கப்பட்டதில், செல்வப்பெருந்தகை, ஹசீனா சையத் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால் சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாகப் பதவி வகித்து வந்தவர் ஹசீனா சையத். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் வாய்ப்பை எதிர்பார்த்த நிலையில், செல்வப்பெருந்தகை தரப்பு முட்டுக்கட்டை போட்டதால் அவருக்கு சீட் கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த ஹசீனா சையத் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், செல்வப்பெருந்தகை மற்றும் மல்லிகார்ஜுன கார்கே குறித்து அவர் அளித்த பேட்டியும் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளானது.
இப்படியான சூழலில்தான், நேற்று சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், “தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்புத் தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்படுகிறார். இவர் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை கவனிப்பார், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு அங்கிருந்த பெரும்பாலான நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“கட்சியில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களைக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாகப் புதிய ஒருவரை மாநிலத் தலைவியாக அறிவித்ததை ஏற்க முடியாது” எனக்கூறி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதற்கு ராமலட்சுமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஆத்திரமடைந்த தொண்டர்கள் நாற்காலிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டதால் போர்க்களமானது. இந்த மோதலில் சிலருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. இதையடுத்து குறுக்கிட்ட அல்கா லம்பா, “தற்போதைக்கு ராமலட்சுமிதான் மாநிலத் தலைவராகச் செயல்படுவார். தேர்தல் முடிந்த பிறகு முறையாக மாநிலத் தலைவர் அறிவிக்கப்படுவார்.
இதை அனைவரும் ஏற்க வேண்டும்; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். அதன் பின்னரே மோதலில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்தனர்.
28 இடங்களில் 2 பெண்
இதுகுறித்து மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், “தொடர்ச்சியாக மகளிர் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியும், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 28 இடங்களில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை தராததால்தான் ஹசீனா சையத் வெளியேறினார். இப்போது சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்குப் பொறுப்பு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் செல்வப்பெருந்தகையின் சிபாரிசு இருப்பதாக ஹசீனா ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். இதனால்தான் இந்த மோதல் வெடித்தது” என்றனர்.
ஏப்.15-ல் தமிழகம் வரும் ராகுல்
முன்னதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு நான் சென்னையில்தான் இருப்பேன். செய்தியாளர் சந்திப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகளில் உரையாற்றுவேன்.
ராகுல்காந்தி வரும் 15-ம் தேதி வருகிறார், பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் பிரச்சாரத்தில் இணைகிறார்கள், நாங்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்போம்” என்றார்.