

சென்னை: தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கடும் குளிர் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஒரு வாரமாக புயல், மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள் ளது. சாலைகள் மற்றும் தெருக் களில் தேங்கும் மழைநீரில், டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
காய்ச்சலுடன் சேர்த்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி பாதிப்புகளுடன் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர்.
இதுதொடர்பாக, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தொடர்ந்து பெய்து வரும் மழையால், பொது விநியோகத்தில் வழங் கப்படும் குடிநீர் மாசுபட வாய்ப்புள்ளது. அதனால், அனைத்து குடிநீர் தொட்டிகளிலும் போதிய அளவில் குளோரின் கலந்து விநியோகத்தை உறுதி செய்ய, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தா தொடர் மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும்.
அதேபோல், ‘லெப்டோஸ் பைரா’ எனப்படும் பாக்டீரியாவில் ஏற்படும் எலி காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், தேங்கியிருக்கும் மழைநீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது. கை, கால்களை சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். டெங்கு பாதிப்பு அடுத்த மாதம் குறையும்” என்றனர்.
ஓஆர்எஸ் கரைசல்: இதனிடையே வயிற்றுப் போக்கு பிரச்சினைகள் தொடர்பாக பொதுசுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறும்போது, “அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் பவுடர் இலவசமாக கிடைக்கும். மழை நேரத்தில் வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே 200 மிலி குடிநீரை காய்ச்சி குளிர்ந்தபின், அதில்ஒரு சிட்டிகை உப்பு, 4 சிட்டிகை சர்க்கரை போட்டு குடிக்கலாம். இதனால் நீர்ச்சத்து குறைபாடு வராது” என்றார்.