திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? - விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? - விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: ‘திருச்சி கிழக்கில் நான் போட்டியா என பேசுகின்றனர். நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஏற்கெனவே முதல்வர் விஜய்யிடம் இதை தெளிவுப்படுத்திவிட்டேன்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில் காணொலியில் பேசும்போது, “தேர்தலுக்கு முன் அதிமுக, தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என பலர் என்னிடம் கூறினர். ஆனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கு பங்கு உண்டு. அரசியலில் நேர்மை, தூய்மை இருக்க வேண்டும் என்பதாலும், நம்மால் கூட்டணி சிதறிவிட்டது என இருக்கக்கூடாது என்பதாலும் கூட்டணியில் தொடர்ந்தோம்.

தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை, சிதறிவிட்டது. அதற்கான காரணங்களை கண்டறியாமல் நாங்கள் கடைசி நேரத்தில் எடுத்த முடிவை அனைவரும் விமர்சிக்கின்றனர். நான் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என கூறுகின்றனர். பதவி ஆசை இருந்திருந்தால் பாஜக அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தபோது அதை பயன்படுத்தியிருக்க மாட்டேனா?

ஆதவ் அர்ஜுனாவுடன் திருமாவளவன் தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைத்திருந்ததாக அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதோடு மட்டுமில்லாமல் திருமாவளவன் தடுமாறுகிறார் என தலைமையை பலவீனப்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுக்கின்றனர்.

விசிக இரண்டு தொகுதிகள் வெற்றி பெற்றிருந்தாலும் அது திமுக கூட்டணியின் வெற்றிதான். தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முடிவு செய்தபோது வெளியில் இருந்து ஆதரவு தருவதைவிட அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர்.

அமைச்சரவையில் விசிக பங்கேற்பது என வந்தபோது 2 எம்எல்ஏக்களில் மூத்த நிர்வாகியான வன்னியரசுவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நான் உறுதியாக இருந்தேன். நான் அமைச்சர்வையில் பங்கேற்க வேண்டும் என்று தவெகவில் இருந்து அழைப்பு வந்தது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறினர். ஆனால், வன்னியரசுவுக்கான வாய்ப்பு பறிக்கப்படும் என்ற காரணத்தால் அதை ஏற்கவில்லை.

இப்போதும் திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியா என பேசுகின்றனர். நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஏற்கெனவே முதல்வர் விஜய்யிடம் இதை தெளிவுப்படுத்திவிட்டேன்” என்று திருமாவளவன் கூறினார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? - விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு
மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in