

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் திமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பிரிப்பர் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக் கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி, திருப்புல்லாணி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் அடங்கியுள்ளன.
இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,52,412, பெண் வாக்காளர்கள் 1,57,740, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 13 பேர் என மொத்தம் 3,10,165 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் திமுக சார்பில் நடப்பு எம்எல்ஏவான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் 2-ம் முறையாக களம் இறங்கியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ்.கே.நாகேந்திரன், தவெக சார்பில் மருத்துவர் சாகுல் ஹமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துகேசவன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் முருகபூபதி மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.
இதுவரை காங்கிரஸ் 3 முறை, சுயேச்சை ஒரு முறை, திமுக 5 முறை, அதிமுக 6 முறை, மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறை என வென்றுள்ளன. 2016 தேர்தலில் அதிமுகவின் எம்.மணிகண்டனும், 2021-ல் திமுகவின் காதர் பாட்ஷா முத்துராம லிங்கமும் வெற்றி பெற்றனர்.
இத்தொகுதியில் பாஜக 1991, 1996, 2006, 2011, 2016 தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந் துள்ளது. அதனால், இந்த முறையாவது ராமநாதபுரம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என, அதிமுக கூட்டணியுடன் பாஜக களம் இறங்கியுள்ளது.
திமுக - பாஜக இடையே கடும் போட்டி
திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். இலங்கையில் கைது செய்யப் படும் தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டு அரசு விதிக்கும் லட்சக்கணக்கான ரூபாய் அபராதத்தை, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சொந்த பணத்தை செலுத்தி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை எம்எல்ஏ மீட்டுள்ளார்.
அதனால், தங்கச்சிமடம், ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு உள்ளது. மேலும், திமுகவின் கூட்டணி பலம், சிறுபான்மை மக்களின் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளன.
அதேநேரம், கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை தெருக்களில் ஓடி சுகாதாரக்கேடாக இருப்பதும், சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதும், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய கடைகள் ஒதுக்கீட்டில் பிரச்சினை, ராமேசுவரம் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்தும் இல்லாத பிரச்சினை, விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் உடனடியாக பெற்றுத் தராத பிரச்சினை என பல்வேறு புகார்கள் ஆளும் கட்சிக்கு நெருக்கடியை தருபவையாக உள்ளன.
பாஜக வேட்பாளர் நாகேந்திரன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், கூட்டணி கட்சி நிர்வாகிகளையும், தனது கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆளும் கட்சியின் குறைகள், செயல்படுத்தாத திட்டங்களை எடுத்துக்கூறுவது, பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.
இதனிடையே, தவெக வேட்பாளர் சிறுபான்மை மக்கள், மீனவர்களின் கணிசமான வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி 2021 தேர்தலில் 17,062 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பெற்றது. அதனால், நாம் தமிழர் கட்சிக்கான வாக்குகள் சிதறாமல் அக்கட்சிக்கு சென்றுவிடும். இருப்பினும், திமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருவதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.