

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல்கட்ட நீட்டிப்பு வழித் தடங்களில், தலா 6 பெட்டிகளைக் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய, ஆலோசகர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் முதல்கட்டம், முதல்கட்ட நீட்டிப்புக்கு பிறகு, சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
மெட்ரோ ரயில்களின் சேவையை பொருத்தவரை தற்போது, வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், விம்கோ நகர் - சென்னை விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சென்னை சென்ட்ரல் - சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.
எனவே, ரயில் களின் எண்ணிக்கையை அதிகரிக்க 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்கவும், கூடுதல் ரயில்களைக் கையாளும் வகையில் முதல் கட்ட நிலையங்களின் கட்டமைப்பை மாற்றியமைக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான திட்ட மேலாண்மை ஆலோசகர் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில்களை வாங்கு வதற்கான ஏல அறிவிப்பை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.
அடுத்த மாதம் ஏலங்கள் திறக்கப்படும். ரயில்கள் வந்து சேர 2 ஆண்டுகள் ஆகும் என்பதால், இந்த நடவடிக்கை முதலில் மேற்கொள்ளப்பட்டது. ரயில் கொள்முதல் மற்றும் விநியோக செயல்முறையை எளிதாக்கவும், 6 பெட்டி ரயில்களைக் கையாளும் வகையில் நிலையங்களை மேம்படுத்தவும், முதல் மற்றும் 2-ம் கட்டத் திட்டங்களைப் போலவே இதற்கும் ஓர் ஆலோசகர் தேவைப்படுகிறார்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசகருக்கான ஒப்பந்தம் விரைவில் வழங்கப்படும். நிலையங்களை மாற்றியமைக்கும் பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும்” என்றார். குறைந்தபட்ச ஏலத்தொகையை முன்மொழிந்த ‘ஏகாம் இந்தியா’ மற்றும் ‘நிப்பான்கோயி’ ஆகிய கூட்டு நிறுவனம், இதன் திட்ட மேலாண்மை ஆலோசகராகச் செயல்பட வாய்ப்புள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.