4 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தூய்மைப் பணியாளர் போராட்டம் தள்ளிவைப்பு

4 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தூய்மைப் பணியாளர் போராட்டம் தள்ளிவைப்பு
Updated on
2 min read

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஓய்​வறை, பேட்​டரி வாக​னங்​கள் உடனடி​யாக வழங்​கப்​படும் என்று அமைச்​சர்​கள் உறுதி அளித்​த​தால், போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யில் பணி நிரந்​தரம், சம்பள உயர்​வு, மகப்​பேறு விடுப்​பு, உணவுப் படி உள்ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி உழைப்​போர் உரிமை இயக்கத்​தைச் சேர்ந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ஏற்​கெனவே மாநகராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன், அமைச்​சர் ராஜ்மோகன் ஆகியோ​ருடன் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு எற்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் 16-வது நாளான நேற்று ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் போராட்​டம் நடை​பெற்​றது. அவர்​களு​டன் அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜூ​னா, சி.டி.ஆர்​.நிர்​மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது பேசிய அமைச்​சர் ஆனந்த், ‘‘உங்​களைச் சந்​தித்து உங்​கள் கோரிக்​கை​யைக் கேட்​கு​மாறு முதல்​வர் எங்​களை அனுப்பி வைத்​துள்​ளார். உங்​கள் கோரிக்கை நியாய​மானது. இப்​போது நிதி​நிலை மோச​மாக இருக்கிறது. நிதி நிலை​யைப் பொறுத்து உங்​கள் கோரிக்கை நிறைவேற்​றப்​படும்’’ என்​றார்.

உங்கள் வீட்டுப் பிள்ளை

அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல் குமார் பேசும்​போது, ‘‘இது உங்​கள் அரசு. என்​னென்ன முடி​யுமோ அனைத்து கோரிக்​கைகளை​யும் இந்த அரசு நிறைவேற்​றும்’’ என்​றார். அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, ‘‘நாங்​கள் இங்கு அமைச்​ச​ராக வரவில்​லை. உங்​கள் வீட்​டுப் பிள்​ளை​யாகத்​தான் இங்கு நிற்​கிறோம். போராடு​வது உங்​கள் உரிமை. உங்​கள் கோரிக்​கையை நிறைவேற்​று​வது எங்​கள் கடமை’’ என்​றார்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா பேசும்​போது, ‘‘கடந்த ஆட்​சி​யில் பல துறை​களில் வெளி முகமை மூல​மாகப் பணி​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதை உடனே மாற்ற முடி​யாது. கடந்த ஆட்​சி​யில் கடன் வாங்கி ஊழல் செய்​தார்​கள். இந்த ஆட்​சி​யில் கடன் வாங்கி மக்​கள் நலத்​திட்​டங்​களை முதல்​வர் செய்து வரு​கிறார். குடும்ப ஊழலை ஒழித்​துள்​ளார். சென்னை அழகாக இருப்​ப​தற்கு நீங்​கள்​தான் காரணம். உங்​கள் கோரிக்​கையை நிறைவேற்ற முதல்​வர் விஜய்க்கு கொஞ்​சம் அவகாசம் கொடுங்​கள்’’ என்​றார்.

அதைத் தொடர்ந்​து, ரிப்​பன் மாளி​கை​யில் அமைச்​சர்​கள் தலை​மை​யில், ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் முன்​னிலை​யில், உழைப்​போர் உரிமை இயக்க தலை​வர் கு.​பாரதி மற்​றும் தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் பாரதி கூறிய​தாவது: நாளொன்​றுக்​குத் தூய்​மைப் பணி​யாளர்​களின் உணவுக்​காக ஒரு​வருக்கு ரூ.50 செல​விடப்​படு​கிறது. அந்​தப் பணம் உணவுப் படி​யாக அடுத்த மாதம் முதல் வழங்​கப்​படும். மொத்​தம் உள்ள 200 வார்​டு​களில், 197 வார்​டு​களில் பெண் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான கழிப்​பறை மற்​றும் ஓய்​வறை வசதி ஒரு மாதத்​தில் ஏற்​படுத்​தப்​படும். போராட்​டத்​தில் ஈடு​பட்​டதற்​காகத் தூய்​மைப் பணி​யாளர்​கள், வழக்​கறிஞர்​கள் மீது பதி​யப்​பட்ட வழக்​கு​கள் ரத்து செய்​யப்​படும்.

புதிதாக 300 பேட்டரி வாகனம்

தண்​டை​யார்​பேட்​டை, அம்​பத்​தூர், அண்ணா நகர் ஆகிய மண்​டலங்​களுக்​குப் புதி​தாக 300 பேட்​டரி வாகனங்​கள் வழங்​கப்​படும். முதல்​கட்​ட​மாக இம்​மாத இறு​திக்​குள் 160 வாக​னங்​கள் வழங்​கப்​படும். இறந்த தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான இழப்​பீடு வழங்​கப்​படும். அக்​.10-ம் தேதிக்​குள் மழை கோட்டு வழங்​கப்​படும். வாரம் ஒரு இணை கையுறை, நாளொன்​றுக்கு 2 முகக்​கவசம் வழங்​கப்​படும் என்று அமைச்​சர்​கள் உறுதி அளித்​துள்​ளனர்.

அக்டோபரில் அடுத்த கூட்டம்

அக்​.3-ம் தேதி அடுத்த கூட்​டம் நடை​பெறும். அதில், வார விடுப்​பு, மகப்​பேறு விடுப்​பு, மாத​வி​டாய் விடுப்​பு, ஆட்​சி​யர் நிர்​ண​யித்த தினக்​கூலி ரூ.832 வழங்​கு​வது தொடர்​பாக அரசுடன் கலந்​தாலோ​சித்து தெரிவிக்​கப்​படும். 2 மாதங்​களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்​டங்​கள் நடை​பெறும். 4 மாதங்​களுக்கு ஒரு முறை ஆணை​யர் தலை​மை​யில் குறைதீர் கூட்​டங்​கள் நடத்​தப்​படும். முதல்​வரைச் சந்​திக்க ஏற்​பாடு செய்​யப்​படும் என்​றும் அமைச்​சர்​கள் உறுதி அளித்​துள்​ளனர். அதனால் 16 நாட்​களாக நடத்தி வந்த போராட்​டத்தை தள்​ளிவைக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அமைச்​சர் ராஜ்மோகன் கூறும்​போது, ‘‘தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தில் நிதி மற்​றும் நிர்​வாகச் சிக்​கல்​கள் உள்​ளன. அவை பேசி தீர்க்​கக்​கூடியது​தான். தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான ஓய்​வறை அமைப்​பது தொடர்​பான பணி​களை நானே நேரில் சென்​று பார்​வை​யிட உள்​ளேன்​’’ என்​றார்​.

4 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தூய்மைப் பணியாளர் போராட்டம் தள்ளிவைப்பு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in