

மதுரை: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 204 பேரை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு அக்கட்சி கடிதம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்தும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் பணி முழுமை அடையவில்லை. தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் அரசு சார்பில் ஆஜராகி வருகின்றனர். இதனிடையே, குற்றவியல் அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அட்வகேட், கூடுதல் அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 204 பதவிகளைக் கேட்டு, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்சி நிர்வாகிகள் கிரிஷ் சோடங்கர், சுராஜ் ஹெக்டே, சுதா எம்.பி. ஆகியோர் கையெழுத்திட்ட அக்கடிதத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தலா 2 கூடுதல் அட்வகேட் ஜெனரல் மற்றும் ஸ்டேண்டிங் கவுன்சில் பதவியும், 3 பேனல் வழக்கறிஞர்கள் பதவியும் கேட்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 பேருக்கும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 10 பேருக்கும் ஏஏஜி மற்றும் அரசு வழக்கறிஞர் பதவி கேட்கப்பட்டுள்ளது.
தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் 181 பேருக்கு அரசு வழக்கறிஞர் பதவியும் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக வழக்கறிஞர்களின் பெயர்களும், அவர்களைப் பரிந்துரைத்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களும் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன. தவெக அரசில் அரசு வழக்கறிஞர்கள் பதவியைப் பிடிக்க தவெக வழக்கறிஞர்களைக் காட்டிலும், கூட்டணிக் கட்சி வழக்கறிஞர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்து 2 அமைச்சர் பதவி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்ற காங்கிரஸ், தற்போது கணிசமான எண்ணிக்கையில் அரசு வழக்கறிஞர் பதவிகளைக் கேட்டும் பகிரங்கமாக கடிதம் அளித்திருப்பது தவெக வழக்கறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.