

மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதியின் தொகுதியில் காங்கிரஸுக்கு வாக்கு கேட்டு ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போஸ்டர். படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
“காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டிக் குக்கூட ஆட்கள் இல்லை” என அண்மையில் மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம்எல்ஏ பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். தனது பேச்சில் காங்கிரஸ் எம்பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரையும் சாடி இருந்தார் தளபதி.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய மாணிக்கம் தாகூர், ‘தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட இந்தத் தேர்தலில் (தளபதியின்) மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் கோரிக்கை வைப்பேன்’ என்றார். இந்தப் பிரச்சினை மேலும் வார்த்தைப் போராகி வளர்வதை விரும்பாத திமுக தலைமை, தளபதியை அழைத்து கண்டித்ததுடன், ‘கூட்டணி தொடர்பாக திமுக-வினர் யாரும் பொதுவெளியில் பேசவேண்டாம். அதை தலைவர் பார்த்துக் கொள்வார்’ என்று அறிக்கையும் வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று, ‘மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் பெயரில் திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நல்லமணி, “திமுக-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரோ மர்ம நபர்கள் இது போன்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கட்சி மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரித்துக் கொண்டிருக் கிறோம். அது எங்கள் கட்சியினராக இருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். மாற்றுக் கட்சியினராக இருந்தால் அவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிப்போம்” என்றார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்துப் பேசி இருக்கும் நிலையில், திமுக-வை சீண்டிப் பார்க்கும் விதமாக காங்கிரஸ் பெயரால் மதுரைக்குள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இரண்டு கட்சிகளுக்குள்ளும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.