“காங். அமல்படுத்திய நீட் தேர்வுக்காக இப்போது அவர்களே போராடுகிறார்கள்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

சென்னை: ‘மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, திமுகவும் காங்கிரஸும் கைகோத்துக் கொண்டு உருவாக்கி, அமல்படுத்திய நீட் தேர்வுக்கு எதிராக, அதே காங்கிரஸ் இப்பொழுது போராடுகிறது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முழு பூசணியை சோற்றில் மறைக்க முயலும் மாணிக்கம் தாகூர். முதல் நீட் தேர்வு நடத்தப்பட்ட நாள் 05.05.2013 அதாவது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த நாள் 26.5.2014. ஆக, முதன் முதலில் நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தான் என்பதற்கு இதைவிட உங்களுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு, காங்கிரஸால் கொண்டு வரப்பட்ட “நீட் தேர்வின்” உண்மை வரலாறு தெரியவில்லை போல. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த டிசம்பர் 2010 அன்று, காங்கிரஸைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் கட்டாயமாக்கப்பட்டது. (அப்பொழுது திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன் மத்திய சுகாதாரத் துறையின் இணை அமைச்சகராகப் பதவியில் இருந்தார்)

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த மே, 2013 அன்று - முதன் முதலாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த ஜூலை 2013 அன்று - நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது (அப்பொழுது “நீட் தேர்வு வேண்டும்” எனக் கூறி, காங்கிரஸின் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அரசு தரப்பில் வாதாடினார்)

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த அக்டோபர் 2013 அன்று - நீட் ரத்தை எதிர்த்து, அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஏப்ரல் 2016-ல் உச்ச நீதிமன்றம் தனது 2013 தீர்ப்பை மறுபரிசீலனை செய்து, நீட் தேர்வை “மீண்டும்” நடைமுறைக்கு கொண்டு வந்தது.

ஆக, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, திமுகவும் காங்கிரஸும் கைகோத்துக் கொண்டு உருவாக்கி, அமல்படுத்திய நீட் தேர்வுக்கு எதிராக, அதே காங்கிரஸ் இப்பொழுது போராடுவது “அவங்களே பாம் வெப்பங்களாம், அவங்களே எடுக்க சொல்வாங்களாம்” என்ற காமெடிதான்.

அதுசரி, “பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்" என்று எங்களுக்கு நீங்க நியாபகப்படுத்துவது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். “தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்" என்று உங்களுக்கு பள்ளியில் சொல்லி ககொடுத்ததெல்லாம் மறந்து விட்டீர்களா தம்பி?. எதற்காக இப்படி தானாக வந்து பொய் சொல்லி மாட்டிக் கொள்கிறீர்கள்?’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்</p></div>
தூத்துக்குடியில் கைதான இளைஞர் மரணம்: போலீஸார் தாக்குதலில் இறந்ததாக உறவினர்கள் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in