

எம்.பி மாணிக்கம் தாகூர்
மதுரை: தன்னை விமர்சித்த திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதியின் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர், எக்ஸ் தளத்தில் உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
இது குறித்து, மாணிக்கம் தாகூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை, திமுக எம்எல்ஏ கோ.தளபதி மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பேசிய கோ.தளபதி, “காங்கிரஸில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரைச் சொல்ல எனக்கு என்ன பயமா?. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்.பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’ கொடுக்கக்கூடாது.
அதற்கு நம்மால் ஆன காரியங்களை செய்ய வேண்டும். நான் எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மூன்று பேர்தான் காரணம். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளன. அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாகப் போய்விடும்.
காங்கிரஸுக்கு ஒரு தொகுதிக்கு ரூ.3000், 4000 ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.” என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கூடுதல் ‘சீட்’ குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவரது கருத்தால், காங்கிரஸ் தவெக பக்கம் செல்கிறதா? அல்லது திமுக கூட்டணியில் பேர வலிமையை அதிகரிக்க இப்படி பேசுகிறாரா? என்ற பல்வேறு கேள்விகளும், விவாதங்களும் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் உடனடியாக மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளது கவனம் பெற்றுள்ளது.