

திருநெல்வேலி: தமிழகத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற ஆசை காங்கிரஸுக்கு உள்ளதாக திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ் தெரிவித்தார்.
திருநெல்வேலியிலுள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியதை கண்டித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை காப்போம் என்ற பெயரில் நாடு முழுவதும் மக்கள் இயக்கம் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 11-ம் தேதி திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து வரும் 25-ம் தேதி மானூர் அழகிய பாண்டியபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.
தியாகிகள் தினமான வருகிற 30-ம் தேதி மாவட்ட அலுவலக முகப்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டு மனு கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு பல கட்ட போராட்டங்களை நடத்தி இந்த விவகாரத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க உள்ளோம்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒரு சதவீதம், 2 சதவீதம் என ஓட்டு வங்கி வைத்துள்ள கட்சிகள் கூட முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படுகின்றன. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை எல்லா அரசியல் கட்சிகளும் முன்வைப்பது வழக்கம் தான். அதுபோன்ற ஆசை காங்கிரஸுக்கும் உள்ளது. தொண்டர்களின் கோரிக்கையை மாநில தலைமையிடம் வலியுறுத்துவோம். மாநில தலைமையின் கருத்தை அகில இந்திய தலைமைக்கு தெரியப்படுத்துவோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதற்கு எங்களுக்கு ஆசை உண்டு. காங்கிரஸ் கட்சியில் எந்தவிதமான பிளவுகளும் கிடையாது. கூட்டணி தொடர்பான கருத்துகளை தெரிவிப்பவர்கள் அனைவருமே காங்கிரஸின் மூத்த தலைவர்கள், முக்கியமானவர்கள். அதை பொதுவெளியில் தெரிவித்ததுதான் பிரச்சனைக்குரியதாக மாறிவிட்டது. அவர்கள் கருத்துகளை தெரிவித்த இடம்தான் தவறு. தொண்டர்கள் சொல்வதை அகில இந்திய தலைமை செவி சாய்த்து கேட்கும்.
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை துறை கொடுக்கும் நெருக்கடி விவகாரத்தில் அவரை நடிகர் என்ற பார்வையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசு தமிழக வெற்றிக் கழகம் மட்டுமல்ல அதிமுகவை அழிக்க நினைத்தாலும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.