கிள்ளியூர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போவது யார்?

3-வது முறையாக கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ்
கிள்ளியூர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போவது யார்?
Updated on
2 min read

நாகர்கோவில்: கிள்ளியூர் - தமிழகத்தின் கடைசி (234-வது) தொகுதி. மார்ஷல் நேசமணி சட்டப்பேரவை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் இருந்துதான் 1957-ல் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கு 60 சதவீதத்துக்கு மேல் நாடார் இன வாக்குகள் உள்ளன. இதில் கிறிஸ்தவ நாடார்கள் அதிகமாக உள்ளனர். மேலும், மீனவர்கள் 20 சதவீதத்துக்கு அதிகமாகவும், முஸ்லிம்கள், பட்டியலினத்தவர் மற்றும் பிற சமுதாயத்தினர் பரவலாகவும் உள்ளனர். வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் தேங்காய்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மீனவர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

காங்கிரஸ் ராஜேஷ்குமார்

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இருமுறை வெற்றிபெற்ற ராஜேஷ்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், 10 ஆண்டுகளில் பல நலத்திட்டங்களை கிள்ளியூர் தொகுதிக்கு பெற்று தந்தவர் என்ற முறையில் தொகுதி மக்களின் ஆதரவு இவருக்கு உள்ளது. 3-வது முறையாக வெற்றிபெறும் முனைப்பில் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தமாகா நிவின் சைமன்

தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக மருத்துவர் நிவின் சைமன் போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் இருமுறை தமாகா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜாண் ஜேக்கப்பின் மகனாவார். தாமரை சின்னத்தில் போட்டியிடும் நிவின் சைமன் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இதனால், தாமரைக்கு இந்து வாக்குகளுடன் கிறிஸ்தவ வாக்குகளும் கிடைக்கும் என நம்புகிறார்.

தவெக சபின்

தமிழக வெற்றி கழக வேட்பாளராக சபின் போட்டியிடுகிறார். இவருக்கு தேங்காய்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள், சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக வாக்குகள் உள்ளன. விஜய் ரசிகர்கள், மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளின் வாக்குகளும் கிடைக்கும் என நம்புகிறார்.

நாம் தமிழர் கட்சி ஹிம்லர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிம்லர் கிள்ளியூர் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். இவர் அப்பகுதியில் உள்ள கனிமவளங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெயர் பெற்றவர். மேலும் இத்தொகுதியில் உள்ள பசுமை வளங்களை பாதுகாப்பேன் என வாக்குறுதி அளித்து வாக்கு கேட்டு வருகிறார்.

கிள்ளியூர் தொகுதியில் முந்தைய தேர்தல்களில் நாம் தமிழருக்கு பெயர் சொல்லும் அளவு வாக்குகள் கிடைத்துள்ளன. நான்கு முனை போட்டி நிலவினாலும் காங்கிரஸ், தமாகா இடையேதான் இருமுனை போட்டி நிலவுகிறது.

சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும் ராஜேஷ்குமார் 3வது முறையாக தொடர் வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புகிறார். மே 4-ம் தேதி வரை பொறுத்திருப்போம். கேரளாவில் இருந்து வரும் நெய்யாறு இடதுகரை கால்வாய் பாசனநீர் கிள்ளியூர் தொகுதி மக்களுக்கு கிடைக்காதது பெரும் குறையாக உள்ளது.

கேரள அரசிடம் பேசி இதற்கு தீர்வு காணவேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இயற்கை ரப்பருக்கு அரசே குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும். கிள்ளியூர் பகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும்.

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கடி விபத்தில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற அதிநவீன மீட்பு விசைப்படகு, மற்றும் கடல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். அரசு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன போன்றவை மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண்கள் - 1,23,798

  • பெண்கள் - 1,21,546

  • இதரர் - 15

  • மொத்த வாக்காளர்கள் - 2,45,359

கிள்ளியூர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போவது யார்?
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்” - ப.சிதம்பரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in