

சிவகங்கை: காகிதமில்லா பத்திரப்பதிவு முறையில் ஆவணங்கள் சரியாக பதிவேற்றம் ஆவதில்லை என்றும், பிழைகளைக் கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஸ்டார் 3.0 காகிதமில்லா பத்திரப்பதிவு திட்டம் கடந்த நவ.2-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது. இதில், செட்டில்மென்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம், பாகப் பிரிவினை பத்திரம், செட்டில்மென்ட் ரத்து பத்திரம் ஆகிய 4 வகையான குடும்ப ஏற்பாடு தொடர்பான ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த முறையில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாக பத்திரப் பதிவு செய்வோர் புகார் தெரிவித்துள்ளனர். இடைத்தரகர்கள் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே பத்திப்பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறை தெரிவித்தது. ஆனால், இதுதொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாததால் இன்னும் பத்திர எழுத்தர்கள், கணினி இயக்குநர்களையே மக்கள் நாடுகின்றனர்.
அங்கு கடந்த காலங்களில் பத்திரப்பதிவு விவரங்களை ‘ஆப் லைனில்’ பதிவு செய்துவிட்டு, அதை டவுன் லோடு செய்வர். பின்னர், அதை பிரின்ட் எடுத்து விண்ணப்பதாரரிடம் கொடுப்பர். அதை விண்ணப்பதாரர் சரிபார்த்த பின்னரே ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர்.
இதனால், பெரும்பாலும் பிழைகளுடன் பத்திரப் பதிவு செய்வது தவிர்க்கப்பட்டது. ஆனால், புதிய நடைமுறையில் நேரடியாக ஆன்லைனில் பத்திரப் பதிவு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், அவற்றை டவுன்லோடு செய்து பிரின்ட் எடுக்க முடியாது.
இதனால் கணினியிலேயே விண்ணப்பதாரர் பிழைகளை சரிபார்க்க வேண்டிய நிலை உள்ளது. அதில் விண்ணப்பதாரர்களால் சரியாக சரிபார்க்க முடியாத நிலை உள்ளது. தவறான விவரங்களுடன் விண்ணப்பித்துவிட்டால், மீண்டும் செலவு செய்து சீர்த்திருத்த பத்திரம் பதிய வேண்டும்.
அதேபோல், சிலசமயங்களில் மூல ஆவணங்கள், துணை ஆவணங்கள் சரியாக பதிவேற்றம் ஆவதில்லை. இதனால், அந்த பத்திரப்பதிவை சார் பதிவாளர்கள் நிராகரிக்கின்றனர். இதையடுத்து, மீண்டும் பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற குழப்பங்களை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தேவகோட்டையைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள் சிலர் கூறியதாவது: புதிய நடைமுறையில் கணினி மூலமே பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. இதனால் பிழைகளை விண்ணப்பதாரர்கள் சரியாக கண்டறிவதில் சிரமம் உள்ளது.
சில சமயங்களில் பிழைகளோடு பத்திரப்பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனால், பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்ததும், அதை டவுன் லோடு செய்யும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தால், சரிபார்க்க எளிதாக இருக்கும். அதேபோல் மூல ஆவணங்கள், துணை ஆவணங்களை நாங்கள் பதிவேற்றம் செய்து விடுகிறோம்.
ஆனால், சார்-பதிவாளர் அலுவலகங்களில் சில ஆவணங்கள் பதிவேற்றம் ஆகாதது போல் காட்டுகிறது. இதனால், அந்த பத்திரப் பதிவை நிராகரிக்கின்றனர். மேலும், தேவகோட்டை போன்ற சில இடங்களில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஆட்கள் பற்றாக்குறையால், ஆவணங்களை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கவும் பல நாட்கள் ஆகின்றன.
இதனால் பதிவுத்துறை கூறியபடி 60 நிமிடங்களிலேயே பத்திரங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற குழப்பங்களை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.