ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மிரட்டல் விவகாரம்: ஆய்வாளர் முகமது புஹாரிக்கு நிபந்தனை ஜாமீன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மிரட்டல் விவகாரம்: ஆய்வாளர் முகமது புஹாரிக்கு நிபந்தனை ஜாமீன்
Updated on: 
1 min read

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில்,ஏற்கெனவே ஜாமீன் கோரி முகமது புஹாரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக முகமது புஹாரி தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூழல் மாறியுள்ளதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார்.

காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவை இன்னும் கோப்புக்கு எடுக்கப்படவில்லை. மேலும், மனுதாரர் காவல் ஆய்வாளராக உள்ளதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

காவல்துறை வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சிகளை கலைக்கக் கூடாது. தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மிரட்டல் விவகாரம்: ஆய்வாளர் முகமது புஹாரிக்கு நிபந்தனை ஜாமீன்
“நிர்வாகத் திறமையின்மை... அலட்சியம்”: கைதிகள் தப்பியது குறித்து தினகரன் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in