ஆதாரங்கள் தராவிடில் முதல்வர் செயலாளருக்கு எதிரான வழக்கை எப்படி விசாரிப்பது? - ஐகோர்ட்

ஆதாரங்கள் தராவிடில் முதல்வர் செயலாளருக்கு எதிரான வழக்கை எப்படி விசாரிப்பது? - ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக முதல்வரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யாத நிலையில் அவருக்கு எதிரான வழக்கை எப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல்வரின் செயலாளர் உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலையில், தொடர்ந்து முதல்வரின் செயலாளராக, உமாநாத், மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவுகளை பிறப்பித்து வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படும் முதல்வரின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் மோகன் தாஸ் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில் இந்த பொதுநல வழக்கை எப்படி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியது.

மேலும், புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரி உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அவரை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, உமாநாத்தை எதிர் மனுதாரராக சேர்க்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

ஆதாரங்கள் தராவிடில் முதல்வர் செயலாளருக்கு எதிரான வழக்கை எப்படி விசாரிப்பது? - ஐகோர்ட்
அரியலூர்: அமைச்சர் சிவசங்கரின் காரை 4-வது முறையாக சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in