

நல்லகண்ணு | கோப்புப்படம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சிறுநீர் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினை காரணமாக, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் சுவாசிக்க உதவியாக டிரக்கியாஸ்டமி கருவியும், உணவு கொடுப்பதற்காக, வயிற்றுப் பகுதியில் குழாயும் பொருத்தப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் வீடு திரும்பினார். அதன்பிறகு, அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், ராஜீவ் காந்திமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே வீடு திரும்பினார்.
நல்லக்கண்ணு 101-வது பிறந்தநாளை கடந்த 26-ம் தேதிகொண்டாடினார். முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், வீட்டில் ஓய்வுஎடுத்து வரும் நல்லகண்ணுவுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. சிறுநீர் வெளியேற்றமும் குறைந்ததால், நேற்று காலை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.