

சென்னை: காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து, இறுதி அறிக்கைகளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்து சிறப்பாகப் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து, இறுதி அறிக்கைகளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்து வழக்குகளை துரிதப்படுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் புழல், தலைமைச் செயலகக்குடியிருப்பு, திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் குழுவினர், நிலுவை வழக்குகளை விரைந்து முடித்து நீதிமன்றங்களில் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்து முத்திரை பதித்தனர்.
அதாவது, கடந்த மே 26 முதல் ஜூன் 30-ம் தேதி வரை, புழல் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த 2,120 வழக்குகளில் 1,023 வழக்குகளுக்கு இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதேபோல் தலைமைச் செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த 932 வழக்குகளில் 562 வழக்குகளும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த 1,164 வழக்குகளில் 528 வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 3 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் 9 காவல் பணியாளர்கள் என மொத்தம் 17 பேரை சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.