வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.172 குறைவு

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.172 குறைவு
Updated on
1 min read

புதுடெல்லி: வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி  சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலைக்குறைப்புக்குப் பிறகு, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்துள்ளது. எனினும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்கு இந்த முறை எந்தவித விலைக் குறைப்பும் அறிவிக்கப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.957.50 என்ற அளவிலேயே நீடிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளவில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் எதிர்வினையாக, உலக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுப் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கப்பல் போக்குவரத்தை முடக்கியது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்த தடையைச் சுட்டிக்காட்டி, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலையை நான்கு தவணைகளாக உயர்த்தின. அதேபோல், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் உயர்த்தப்பட்டது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து ஓரளவுக்கு சீராக தொடங்கியுள்ள சூழலில், வணிக சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் முதன்முறையாகக் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.172 குறைவு
“தவெக கூட்டணியில் உள்ளது மதிமுக; இனி எல்லாமே வெற்றிதான்” - வைகோ உற்சாகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in