

கோவை மாநகராட்சி அலுவலகம்.
கோவை: கோவை மாநகராட்சியில் வரி வசூலில் முறைகேடு காரணமாக ரூ.2,300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது சிறப்பு தணிக்கை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவை சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளருமான எஸ்.பி.தியாகராஜன் கோவை மாநகராட்சியின் வரி வசூல் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டிருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்கள் குறித்து செய்தியாளர்களிடம் எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:
தணிக்கைத்துறை இயக்குநரின் உத்தரவுப்படி, அண்மையில் கோவை தணிக்கைத்துறை அதிகாரிகள், மாநகராட்சியில் 2021-2026 இடையேயான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை, எல்இடி விளக்குகள் கொள்முதல், பராமரிப்புப் பணி, பருவகாலப் பணிகள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு 419 பக்கத்துக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதில் குடியிருப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியைப் போல், தொழிற்சாலை, நிறுவனங்கள், கல்விக் கூடங்களுக்கும் குறைவான வரி விதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. குறைவான அளவு வரி விதிக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளனர். இதன் மூலமாக சொத்துவரியில் மட்டும் ரூ.2,053 கோடி வரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கான சொத்து வரி விதித்ததில் ரூ.87.17 கோடி, வீடுகளுக்கு வழங்கும் குடிநீர் இணைப்பை வணிகப் பயன்பாட்டுக்கு வழங்கியதில் ரூ.158.31 கோடி, முறைகேடாக சொத்து வரி தள்ளுபடி செய்ததில் ரூ.34.60 கோடி, அனுமதியில்லாத கட்டிடங்களுக்கு, சட்ட நடவடிக்கை இல்லாமல் சொத்து வரி விதித்ததில் ரூ.274 கோடி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யாததால் ரூ.82.25 கோடி, சூயஸ் நிறுவனத்திடம் வட்டி வசூலிக்காததால் ரூ. 47.92 கோடி, சூயஸ் நிறுவனம் தோண்டிய குழியை மாநகராட்சி பொது நிதியில் ஒப்பந்தம் விட்டு சீரமைத்ததில் ரூ.1 கோடி மற்றும் அந்த குழிகளில் வெட்மிக்ஸ் நிரப்பியதற்கு ரூ.87 லட்சம் என, மொத்தமாக மாநகராட்சிக்கு ரூ. 2,300 கோடி வரை வருவாய் இழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தப் பணிகள், வரி விதிப்பு சலுகை உள்பட மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிதி இழப்பு ஏற்படுத்திய முறைகேடுகள் தொடர்பாக, மாநகராட்சியில் உள்ள ஆவணங்கள் மாயமாகும் முன்பு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
பெரியார் அறிவுலகம் நூல் மோசடி போன்று, கோவை மாநகராட்சியிலும் மிகப்பெரிய மோசடி அரங்கேறியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் மீதும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.