

அமைச்சர் அருண்ராஜ்
திருப்பூர்: “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான மிதிவண்டி போட்டியை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் இன்று தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மிதிவண்டி போட்டியை நடத்தி வைத்துள்ளோம்” என்றார்.
பின்னர், ‘தவெகவும், பாலியல் குற்றங்களும் என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதலாம்’ என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியது தொடர்பான கேள்விக்கு, “எந்தெந்த காலகட்டங்களில் எந்தெந்த முறையில் அவர் மாற்றிப் பேசியுள்ளார் என்பது உங்களுக்கே தெரியும்.
ஆகவே, அவர் சொல்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பாஜக - அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை அழிப்பதுதான் அரசியல் லட்சியம் என்றெல்லாம் பேசியுள்ளார்” என்றார்.
பின்னர், கோவையில் தவெக பெண் நிர்வாகி மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஒன்றியச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, “முதல்வர் இந்த விஷயத்தில் தெளிவாக உள்ளார். தவறு யார் செய்தாலும் கட்சி சார்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பின்னர் பேசிய அவர், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார்” என்றார். முன்னதாக போட்டியின் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.