

முதல்வர் விஜய்
சென்னை: குழந்தைத் தொழிலாளர் முறையைத் தகர்ப்போம். கல்வி அளித்து குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம் என்று முதல்வர் விஜய் சூளுரைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக உலகெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஜூன் 12-ம் நாள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும் இனிய பருவமே குழந்தைப் பருவமாகும். இப்பருவத்தில், பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் வேலைக்குச் செல்கின்ற குழந்தைகளை, அக்கொடுமையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் வழங்கிட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
ஒவ்வொரு குழந்தைக்கும், சுதந்திரமாக வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை போன்றவை அவசியமானதாகும். இவற்றை வழங்க மறுப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாகும். குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிராக எவ்வகையான தொழில்களிலும் குழந்தைகளைப் பணியமர்த்தக் கூடாது மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்தக் கூடாது.
குழந்தைகளைத் தொழிற்பணிகளில் ஈடுபடுத்தாமல் அவர்களுக்கான உரிமைகளைப் பேணிக்காத்து, முறையான கல்வி அளித்து, மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதுடன் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதையே தமிழக அரசு தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதனடிப்படையில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்திட தமிழக அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெறப்படும் வருமானம் வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறுமை என்பதை சமூகமும், பெற்றோர்களும் உணர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் துணை நின்று, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம். குழந்தைத் தொழிலாளர் முறையைத் தகர்ப்போம்! கல்வி அளித்து குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம்!” என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.